அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது.
இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் சந்திக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்டுவதுண்டு.இவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் தமிழ்த் தரப்பை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கலாம். நீங்கள் முதலில் ஐக்கியப்படுங்கள் அதன் பின் உங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுங்கள் என்ற ஒரு தொனி அங்கே உண்டு.
ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் மட்டுமல்ல, எல்லாச் சமூகங்களிலும் பல்வேறு அபிப்பிராயங்கள், பல்வேறு அடுக்குகள் இருக்க முடியும்.ஜனநாயக வழிமூலம் தலைமைகள் தெரிவு செய்யப்படும் ஒரு சமூகத்தில் ஆகப்பெரிய மக்கள் ஆணையைப் பெற்ற கட்சியை அழைத்துப் பேசுகிறார்கள்.ஆயுதப் போராட்டங்கள் நடக்கும் இடங்களில் வலிமையான இயக்கத்தை அழைத்துப் பேசுகிறார்கள். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களைப் பொறுத்தவரை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு பிரதிநிதித்துவமாக இருந்தது.ஆனால் அது படிப்படியாக உடைந்து போய் இப்பொழுது தமிழரசுக் கட்சி ஒப்பீட்டளவில் பெரிய கட்சியாக இருக்கின்றது.
உள்ளதில் பெரிய மக்கள் அணையை பெற்ற கட்சியோடுதான் வெளிநாடுகள் பேசும். ஆனால் அதற்காக அந்தக் கட்சி மட்டும்தான் அந்த மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதல்ல. அது ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது என்று பொருள்.
எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பிடம் ஒற்றுமை இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் வெளிச் சமூகமானது, பொறுப்புக்கூறலில் தனக்குள்ள பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கு அதை ஒரு சாட்டாக முன்வைக்கின்றதா? என்பதையும் ஆழமாக பார்க்க வேண்டும்.
ஆனால் இப்பொழுது தமிழ்மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் பெரிய ஆணையைப் பெற்ற தனிக் கட்சி எது?தமிழ்ப் பகுதிகளில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி பெற்ற அதே அளவு ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி அதாவது அரசாங்கமும் பெற்றிருக்கிறது. அதாவது தமிழ்மக்களின் ஆணை எனக்கும் உண்டு என்று அரசாங்கம் சொல்லக்கூடிய ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது.அதை ஒரு பெருமைக்குரிய அடைவாக அரசாங்கம் ஜெனிவாவில் வைத்து கூறுகிறது;புதுடில்லியில் வைத்து கூறுகிறது;ஏனைய உலக தலைநகரங்களில் வைத்துக் கூறுகிறது.இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத ஒரு தோற்றப்பாடு.
எனவே இப்பொழுது தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக, நல்லிணக்கம் தொடர்பாக, பொறுப்புக்கூறல் தொடர்பாக,இறுதித் தீர்வு தொடர்பாக நாங்களும் பேசுவோம்; எங்களுக்கும் உரிமை உண்டு என்று அரசாங்கம் சொல்லும்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சிறீதரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமைச்சர் பிமல் ரட்நாயக்க என்ன சொன்னார் என்பது அந்தத் துணிச்சலில் இருந்துதான் வருகிறது.
தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளின் விகிதத்தை வைத்துக் கணக்குக் காட்டலாம். ஆனால் வெளித் தோற்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியானது தமிழரசு கட்சிக்கு நிகரான ஆசனங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால் இருக்கும் உட் கணக்குகள் அரசியல் விமர்சகர்களுக்கு உரியவை. ஆனால் சாதாரண மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் வெளியே காட்டப்படுவது இத்தனை ஆசனங்கள் என்பதுதான்.இந்தக் கணக்கை மாற்றுவதற்குத்தான் கஜேந்திரகுமார் ஒர் ஐக்கிய முயற்சியில் ஈடுபட்டார்.ஆனால் தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை.
தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கட்சிகளே பொறுப்பு.தமிழ்த் தேசிய கட்சிகள் விட்ட பிழைகளின் விளைவு அது.யார் என்றே தெரியாத வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை அதனால்தான்
அதே தவறு இப்பொழுதும் தொடர்கிறது.முன்னைய ஐநா கூட்டத் தொடர்களைப் போலன்றி தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பின்னரான ஐநா கூட்டத் தொடர்களில் தமிழ்த் தரப்பின் நிலைமை பலவீனமாக இருக்கிறது என்பதனை தமிழ்க் கட்சிகள் நன்கு அறியும்.ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை வருகைக்குப் பின் அவர் கூறிய கருத்துக்களிலிருந்தும் அதை உணரக்கூடியதாக இருந்தது.
ஆனால் தமிழ்ப் பகுதிகளில் என்பிபி பெற்ற வெற்றிகளுக்குப் பின் ஐநாவை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளிடம் குறிப்பாக தமிழரசுக் கட்சியிடம் ஒன்றிணைந்த வியூகம் எதுவும் இல்லை.அதாவது தோல்விகளிலிருந்து அவர்கள்,குறிப்பாக தமிழரசு கட்சி,கற்றுக் கொள்ளவேயில்லை.விளைவாக இம்முறை ஐநாவுக்கு தமிழ்த் தேசியப் பேரவை ஒரு கடிதம் அனுப்பியது.தமிழரசுக் கட்சி ஒரு கடிதம் அனுப்பியது. போதாக்குறைக்கு சிவில் சமூகங்களும் இரண்டாகப் பிரிந்து நின்று கடிதம் அனுப்பின.கட்சிகளுக்கு இருந்த நோய் சிவில் சமூகங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. இவை தவிர புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஐநாவுக்கு கடிதங்களை அனுப்பின.ஆனால் தாயகமும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் இணைந்து கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து ஒரே கடிதத்தை அனுப்ப முடியவில்லை.அதாவது ஜெனிவாவில் அரசாங்கம் தனக்கும் தமிழ் மக்களின் ஆணை உண்டு என்று கூறுகின்ற ஒர் அனைத்துலகச் சூழலில்,தாயகத்தில் தமிழ்க் கட்சிகள் தொடர்ந்து தங்களுக்கிடையே பிடுங்குப்படுகின்றன; சிவில் சமூகங்களும் பிடுங்குப்படுகின்றன.
தமிழ் ஊடகங்களை மட்டும் நுகரும் தமிழ் மக்கள், தமிழ் சமூக வலைத்தளங்களை மட்டும் நுகரும் தமிழ் மக்கள், செம்மணி என்ற உணர்ச்சிப் புள்ளிக்கூடாக ஐநாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஐநாவோ அல்லது இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய சமூகமோ நிகழும் ஐநா கூட்டத் தொடரை செம்மணிக்கூடாகப் பார்க்கவில்லை. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகளில் செம்மணியைப் பற்றிய சில வாசகங்கள் உண்டு. அவ்வளவுதான். அதற்குமப்பால் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றுதான் ஐநா சிந்திப்பதாகத் தெரிகிறது.நிகழும் ஐநா கூட்டத்தொடர் அதைத்தான் உணர்த்துகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி வெளியிடப்பட்ட உத்தேச தீர்மான வரைபு-இது இறுதியானது அல்லவெனினும் -அதைத்தான் உணர்த்துகின்றது.
நிகழும் ஐநா கூட்டத்தொடரில் இந்தியா வழமை போல 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறது.ஏறக்குறைய ஐநாவின் நிலைப்பாடும் அதுதான் என்று ஊகிக்கத்தக்க விதத்தில்தான் ஐநாவின் உத்தேச தீர்மான வரைபு காணப்படுகிறது.இந்தியாவையும் ஐநாவையும் கவர்வதற்காகவும்,ஐநாவிற்குரிய வீட்டு வேலைகளைச் செய்வதன்மூலம் தனது நிலைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்காவும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வரும் ஆண்டில் நடத்தக்கூடும். அப்படி ஒரு நிலைமையை முன்னுணர்ந்து தமிழ்க் கட்சிகள் ஏதாவது தயாரிப்புடன் காணப்படுகின்றனவா?
இப்போதுள்ள ஒப்பிட்டளவில் பெரிய கூட்டு ஆகிய தமிழ்த் தேசியப் பேரவை ஈடாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டுக்குள் காணப்படும் மற்றொரு கூட்டு ஆகிய டிரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ஈபி.ஆர்.எல்.எப் 13ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்குகளைத் தமிழ்ப் பகுதிகளில் நடத்தி வருகிறது.இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈபி.ஆர்.எல்.எப்இற்கும் இடையிலான முரண்பாடுகளை ஆழமாக்கக்கூடியது. அது அதன்விளைவாக டிரிஎன்னேக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான முரண்பாடுகளையும் ஆழமாக்கக்கூடியது.
தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியானது டி.ரி.என்.ஏயை நெருங்குவதாகவும் தெரிகிறது.வவுனியாவில் நடந்த 13ஆவது திருத்தம் குறித்த கருத்தரங்கில் சுமந்திரன் கலந்து கொண்டார். சுமந்திரனைத் தனிமைப்படுத்த அல்லது தமிழரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தத்தான் தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டு உருவாக்கப்பட்டது என்று தமிழரசுக் கட்சி கருதுகின்றது. எனவே அதற்கு எதிர் வியூகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு சுமந்திரன் டி.ரி.என்.ஏயை நெருங்கிவரும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
எதிர்கால தேர்தல்களில் யாரோடு நின்றால் கூடுதலான வெற்றிகளைப் பெறலாம் என்று டிரிஎன்னே-வழமைபோல-சிந்திக்குமாக இருந்தால் அனேகமாக தமிழ்த் தேசியப் பேரவை உடையக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம்.
தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கிய பொழுது கஜேந்திரக்குமார் ஒரு வசனம் சொன்னார்.இந்தக் கூட்டு உடையுமானால் அதைத் தமிழ் மக்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று. அதில் அரைவாசி உண்மை உண்டு.முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்த மக்களுக்கு இதுபோன்ற கூட்டுக்கள் உடைவது பெரிய இழப்பில்லை. ஆனாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தக்கூடிய உடைவுகள்,சிதறல்கள் போன்றன ஒப்பீட்டளவில் இழப்புகள்தான். அதை நிகழும் ஐநா கூட்டத்தொடரில் உணரக்கூடியதாக உள்ளதல்லவா?














