உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர்.
இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர்.
ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங்களாலும், மாநிலங்களின் சில குழுக்களாலும் சவால் செய்யப்படுகின்றன.
ஜனாதிபதி வரிகளை விதிப்பதில் தனது அதிகாரத்தை மீறிவிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
6-3 பழமைவாத பெரும்பான்மையைக் கொண்ட அமெரிக்காவின் உயர் நீதிமன்றம், ஒரு வழக்கில் இறுதி முடிவுகளை எட்டுவதற்கு வழக்கமாக பல மாதங்கள் எடுக்கும்.
ஆனால், இந்த வழக்கில் அது வேகமாக நகரும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.
இது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான உந்துதலின் முதல் பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது.
இந்த வழக்கு 1977 ஆம் ஆண்டு சட்டமான சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) மையமாகக் கொண்டுள்ளது.
இது அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக வர்த்தகத்தை “ஒழுங்குபடுத்தும்” அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
ட்ரம்ப் முதன்முதலில் கடந்த பெப்ரவரியில் சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி விதிக்க IEEPA ஐப் பயன்படுத்தினார்.
ஏப்ரல் மாதத்தில் அவர் அதை மீண்டும் பயன்படுத்தி, உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வரும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை வரிகளை விதிக்க உத்தரவிட்டார்.
அந்த வரிகள் இந்த கோடையில் நிலைபெற்று, அமெரிக்கா நாடுகளை ஒப்பந்தங்களை செய்யத் தள்ளியது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் – அடுத்த தசாப்தத்தில் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் வருவாயைச் சேர்க்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




















