நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.
ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி பஹலகம கடல்போக்குவ பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது இதில் ஏ13 கண்டி நாவலபிட்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டன.
குறித்த வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை இரவு பகலாக இரானுவத்தின் உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொது மக்கள் இணைந்து முன்னெடுத்தனர் .
அதனை தொடர்ந்து மும்மத சமய வழிபாடுகளை தொடர்ந்து கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தலைமையில் இன்று (15) காலை ஏழு மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தூசாரி ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில் இந்த வீதி இவ்வளவு சீக்கிரமாக திறப்பதற்கு உதவிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்தநாயக்க அவர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.
அத்தோடு இந்த வீதி திறப்பதற்கு ஆறு வாரங்கள் ஆகலாம்,ஒரு மாதம் ஆகலாம் என்று தான் எண்ணியிருந்தோம் ஆனால் இரானுவத்தினதும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் பொது மக்களினதும் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்ச்சியாக இரவு பகல் பாராது கிடைத்து வந்தமையினால் இந்த வீதி இன்று திறக்க முடிந்துள்ளது .
இதனையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த வீதியினை திறப்பதற்காக பொது மக்கள் பாரிய ஒத்துழைப்பினை செய்தனர் வேலை செய்பவர்களுக்கு தண்ணீர் போத்தல்களையும் உணவினையும் ஆதரவினையும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர் அதனால் தான் இந்த வீதி இவ்வளவு சீக்கிரம் திறக்க முடிந்தது எனவே நாவலபிட்டி மக்கள் சார்பாகவும் அரசாங்கத்தின் சார்ப்பாகவும் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹட்டன் கண்டி பிரதான வீதியில் கடந்த 27 ம் திகதி பெய்த கடும் மழை காரணமாக பல இடங்களில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது அதனை சில தினங்களில் சீர் செய்த போதிலும் ஹட்டன் கண்டி பஹலகம கடபோக்குவ பகுதியில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு பிரதான வீதியும் புகையிரத வீதியும் பாரிய சேததத்தினை ஏற்படுத்தியது.
இதனால் இந்த வீதியின் போக்குவரத்து கடந்த காலங்களில் ஹட்டன் நாவலபிட்டி பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் பாஹலகம வரையிலும் கண்டியிலிருந்து நாவலபிட்டி ஊடக வரும் வாகனங்கள் உலப்பனை வரையும் மட்டுப்படுத்தப்பட்டது.
இதனால் அத்தியவசிய தேவைகளுக்காகவும் வைத்தியசாலைக்கு செல்பவர்கனும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
வேலைக்கு செல்லும் அரச ஊழியர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாது பாரிய நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்தனர்.
இந்நிலையிலேயே குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் மண்சரிவு காரணமாக பலர் மண்ணில் புதையுண்டதாகவும் இந்த இடத்தில் கட்டடங்கள் அமைக்க அனுமதி இல்லாத நிலையில் எவ்வாறு கட்டடங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறித்த அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.














