நாட்டில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதன் மூலம் நாடு பல துறைகளில் அராஜக நிலையை நோக்கிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு வருட காலமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் கடமையாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் இயங்கி வருகிறது.
ஒரு நாடு ஒரு மாத காலம் கணக்காய்வாளர் நாயகம் இன்றி இயங்குவது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். தகுதியுள்ள அதிகாரிகள் இருக்கும் போதுஇ அவர்களின் பெயர்களைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார்.
பதில் கணக்காய்வாளர் நாயகமாக இருந்த தர்மப்பிரிய கம்மன்பில அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தும், அவரது பெயரைப் பரிந்துரைக்காமல் தகுதி குறைந்தவர்களின் பெயர்களையே ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.
இதன் காரணமாகவே அரசியலமைப்பு பேரவை அந்தப் பெயர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு உள்ளிட்ட பல குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த தணிக்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.முறையான அதிகாரியை நியமிக்கத் தவறியமை குறித்து சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்குத் தெரியப்படுத்த எதிர்க்கட்சிகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளன.
நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பேணவும் அராஜக நிலையைத் தவிர்க்கவும் தகுதியான ஒருவரை உடனடியாக கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.














