இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து சீன நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, அரசு ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் சீன நிறுவனங்கள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் பதிவு செய்து, அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது எல்லை பதற்றம் தணிந்து, சீனாவுடன் துாதரக ரீதியிலான உறவு மேம்பட்டுள்ள நிலையில், வர்த்தக உறவுகளை மீட்டெடுக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
இதேவேளை “சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. எனினும், பிரதமர் அலுவலகம்தான் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கும்.
திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும், உதிரிபாக பற்றாக்குறை நிலவுவதாகவும் பல்வேறு அரசு துறைகள் தெரிவித்ததையடுத்து, தடையை நீக்க பரிசீலிக்கப்பட்டுள்ளது,” என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



















