தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் முன்நிலையாகுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு, பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சம்பவத்தின்போது கிராம சேவையாளர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தார்.
அத்துடன் வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.













