உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு 2 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதையெட்டி, 286 கிலோ எடையுள்ள தனுசு (வில்) நேற்று அயோத்திக்கு வந்து சேர்ந்தது. இது, ராமர் கோயிலுக்கு காணிக்கையாக, ஒடிசாவின் சனாதன ஜாக்ரன் மஞ்ச் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இது, தமிழ்நாட்டின் கோயில் நகரமான காஞ்சிபுரத்தின் 48 பெண் கைவினை கலைஞர்களால் பஞ்சலோகத்தில் செய்யப்பட்டதாகும். இந்த தனுசை, ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராய், உரிய சடங்குகள் மற்றும் சம்பிரதாய முறையில் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை அதிகாரிகள், துறவிகள் மற்றும் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இது குறித்து சனாதன ஜாக்ரன் மஞ்சைச் சேர்ந்த சந்தோஷ் குமார் பிஸ்வாஸ் கூறும்போது, `இந்த பிரம்மாண்ட கோதண்டத்தைக் கண்ட அனைவரும் அதன் பிரம்மாண்டம், கலைத்திறன் மற்றும் தெய்வீகத் தன்மையைக் கண்டு மெய்சிலிர்த்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோதண்டத்துடனான ஊர்வலம் ஒடிசாவின் 30 மாவட்டங்கள் வழியாகச் சென்றது.
பக்தர்கள் பல்வேறு இடங்களில் மலர் தூவி, மேளதாளங்கள் முழங்க, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்களுடன் பக்தியுடன் கோதண்டத்தை வரவேற்றனர். இந்த ஊர்வலம் ஒரு மத யாத்திரையாக மட்டுமல்லாமல், சனாதன கலாச்சாரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் சின்னமாகவும் மாறியது’ என்றார்.


















