அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை அதனாலயே தான் கிரிக்கெட் வாழ்விலிருந்து விடைபெற்றதாக முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் 7 வருடங்களின் பின்னர் மனத் திறந்து பேசியுள்ள காணொளி பரவலாக பரவி வருகிறது
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி சகலதுறைவீரராக வலம் வந்த யுவராஜ்சிங், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். அந்த தொடரில் சகல துறைகளிலும் பிராகாசித்த யுவ்ராஜ் சிங் 362 ஓட்டங்கள் மற்றும் 15 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.
இந்த நிலையில் தனது ஓய்வுக்கான காரணத்தை 7 ஆண்டுக்கு பிறகு யுவராஜ்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் சேனலில் கலந்துரையாடிய போது யுவராஜ்சிங் பேசுகையில்,
‘எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி பகுதியில் அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை. எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை. தேவையான ஆதரவும், மரியாதையும் இல்லாத போது ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக விளையாட வேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதைவிட மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன். கிரிக்கெட் தான் எனது வாழ்வின் முக்கியமானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதுவே சுமையானது. கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த பின்னரே அந்த சுமை விலகி பழைய நிலைக்கு திரும்பினேன் ‘
தற்போது குறித்த கலந்துரையாடல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.















