ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், நிதி ஆதாரம் இன்றி அந்த அமைப்பு ‘உடனடி நிதி சரிவை’ (mminent financial collapse) எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில்இ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில், ஐநா சபையின் இந்த நிதிப் பிரச்சனைகளை தன்னால் மிக எளிதாகச் சரிசெய்ய முடியும் என்று கூறி உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளார்.
அமெரிக்கா தான் ஐநா சபைக்கு அதிகப்படியான நிதியை வழங்கும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் வரிப்பணம் தேவையற்ற முறையில் உலக அமைப்புகளுக்கு வாரி வழங்கப்படுவதாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே அதிருப்தி தெரிவித்து வருகிறார். ஐநா-வின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த அமைப்பு அமெரிக்காவிற்குத் தகுந்த மதிப்பையோ அல்லது பலனையோ தருவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
தன்னால் இந்தப் பிரச்சனையை எப்படிச் சரிசெய்ய முடியும் என்பது குறித்துப் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா வழங்கும் நிதியைக் குறைப்பதன் மூலமும், மற்ற நாடுகளை அதிகப் பங்களிக்க வைப்பதன் மூலமும் ஐநா சபையைச் சீர்திருத்த முடியும் என்று நம்புகிறார். ‘அமெரிக்கா இனி மற்ற நாடுகளின் செலவுகளைத் தன் தலையில் சுமக்காது’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஐநா சபை தனது செலவுகளைக் குறைத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே தனது முந்தைய ஆட்சி காலத்தில்இ உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளுக்கான நிதியை ட்ரம்ப் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு கடுமையான போக்கை அவர் ஐநா சபையின் மீதும் பிரயோகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐநா சபையின் பல்வேறு உலகளாவிய நலத்திட்டங்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில், உறுப்பு நாடுகள் தங்களின் நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது கூடச் சிரமமாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ட்ரம்பின் தற்போதைய கருத்துக்கள் ஐநா சபைக்குப் பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்த அமைப்பையே முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இருப்பதால் சர்வதேச தூதரக அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ட்ரம்பின் இந்த ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ (America First) கொள்கை, சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.


















