ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் ஊழல் வழக்கில் தனது சகோதரர் அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக மன்னர் சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட 30 இலட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில் அண்ட்ரூ குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:
2010-ஆம் ஆண்டு அண்ட்ரூ இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவராக இருந்தபோது சிங்கப்பூர், வியட்நாம், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணங்களின் இரகசிய அறிக்கைகளை ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகத் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்வதற்கான ‘மிக இரகசிய’ விவரங்களையும் அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறும் செயல் என ‘ரிபப்ளிக்’ என்ற அமைப்பு முறைப்பாடு அளித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
‘மவுண்ட்பேட்டன்-வின்சரின் நடத்தை குறித்து தொடர்ந்து வெளிவரும் முறைப்பாடுகள் குறித்து மன்னர் மிகுந்த கவலை அடைந்துள்ளாரர். பொலிஸ் எங்களை அணுகினால்இ அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.’
இதன் மூலம், தனது சகோதரரைக் காப்பாற்ற முயலாமல் சட்டத்திற்கு மதிப்பளிக்க மன்னர் தீர்மானித்திருப்பது தெளிவாகியுள்ளது.
அண்ட்ரூ ஏற்கனவே தனது ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக்’ பட்டங்களை 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இழந்தார். தற்போது அவர் தனது வின்சர் கோட்டை இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் தங்கியுள்ளார்.
மன்னர் சார்ள்ஸ் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அங்கிருந்த ஒருவர் ‘அண்ட்ரூ பற்றி உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும்?’ எனக் கத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோரும் எப்ஸ்டீன் விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அண்ட்ரூ இந்த முறைப்பாடுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்களில் பெண்ணுடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது பிரித்தானிய அரச குடும்பத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.















