ரோபோ கைகள் கான்கிரீட் சுவர்களை மிக வேகமாக அச்சிடுகின்றன, ஆனால் கட்டுமானத் துறை இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் மந்தமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
லிண்டா ரெய்ஸ்மேன் (Linda Reisman) என்பவர் கனடாவில் 3D அச்சு முறை வீடுகளின் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய முதலீட்டைச் செய்துள்ளார்.
ஒன்டாரியோவின் முஸ்கோகா (Muskoka) பகுதியில் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட நினைத்தபோது, பாரம்பரிய கட்டுமான நிறுவனங்கள் அதிக விலை கேட்டன.
இதனால், தனது சேமிப்பான சுமார் $700,000 (கனேடிய டாலர்) தொகையை ஒரு ரோபோ கையை வாங்குவதற்காக முதலீடு செய்தார்.
இந்த ரோபோ கை கான்கிரீட் சுவர்களை அடுக்கு அடுக்காக அச்சிடும் திறன் கொண்டது.
தற்போது அதே பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் ரெய்ஸ்மேன், தனது சொந்த வீட்டை அச்சிடுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் வீடுகளை அச்சிட்டுத் தர விரும்புகிறார்.
இதன் மூலம் நாட்டின் வீட்டுவசதி நெருக்கடிக்குத் தீர்வுகாண முடியும் என அவர் நம்புகிறார்.
இதேவேளை, வீட்டுவசதித் துறையில் 3D அச்சிடுதல் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்று அரசாங்கம் கூறி வருவதையும், அதற்கான மானியங்கள் வழங்கப்படுவதையும் அறிந்த பின்னர் ரெய்ஸ்மேன் இந்தத் துறையில் இறங்கினார்.
கனடா முழுவதும் சில நிறுவனங்கள் 3D அச்சு முறை திட்டங்களைத் தொடங்கியிருந்தாலும், இது முழுமையாகப் பயன்பாட்டிற்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
3D அச்சு இயந்திரத்தால் சுவர்களை மட்டுமே உருவாக்க முடியும்.
ஒரு முழுமையான வீட்டிற்கு கதவுகள், ஜன்னல்கள், கூரை, பிளம்பிங் மற்றும் மின்சார வேலைகளுக்குப் பாரம்பரியத் தொழிலாளர்களின் உதவி தேவை. ஆனால், கனடாவில் உள்ள ஒப்பந்ததாரர்கள் இந்தத் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படத் தயங்குவதாக ரெய்ஸ்மேன் கூறுகிறார்.













