2025 டிசம்பரில் 3.4% ஆக இருந்த இங்கிலாந்தின் பணவீக்கமானது கடந்த ஜனவரி மாதத்தில் 3% ஆகக் குறைந்துள்ளது.
அத்துடன், இந்த நிலையானது இங்கிலாந்து வங்கியால் வட்டி விகிதங்களில் முன்கூட்டியே குறைப்பு ஏற்படும் என்ற நம்பிக்கைகளுக்கு ஊக்கத்தை அளித்தது.
இந்த வீழ்ச்சி பெரும்பாலான நகர பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகளுடன் ஒத்துப்போனதுடன் 2025 மார்ச் மாதத்தின் பின்னர் மிகக் குறைந்த அளவில் பதிவானது.
பெட்ரோல் விலை, விமானக் கட்டணம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சியே இந்த சரிவுக்குக் பிரதான காரணம் என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 2025 டிசம்பர் இறுதி வரையிலான மூன்று மாதங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1% மட்டுமே விரிவடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தை உள்ளடக்கிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வேலையின்மை ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.2% ஆக அதிகரித்துள்ளது.
2025 டிசம்பர் வரையிலான ஆண்டில் தனியார் துறை வருவாய் 3.4% அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















