ஸ்காட்லாந்து அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ‘க்ளென் சானோக்ஸ்’ (Glen Sannox) பயணிகள் படகு, சேவையில் இணைந்து ஓராண்டிற்குள்ளேயே பல மில்லியன் பவுண்டுகள் செலவில் புதிய உந்துருளிகளை (Propellers) பொருத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சுமார் 7 ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர், 2025 ஜனவரியில் சேவையில் இணைந்த க்ளென் சானோக்ஸ் படகின் அடிப்பகுதியில் (Hull) சிறிய விரிசல் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைச் சரிசெய்யவும், கப்பலை பலப்படுத்தவும் சுமார் 3.2 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 34 கோடி ரூபா) செலவாகும் என ஃபெர்குசன் மரைன் (Ferguson Marine) நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரேம் தாம்சன் (Graeme Thompson) நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
கப்பலின் உந்துருளிகளில் ஏற்படும் ‘கேவிடேஷன்’ (Cavitation) எனப்படும் குமிழி வெடிப்புகளால் உருவாகும் அதிர்வுகளே இந்த விரிசலுக்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கப்பல் பின்னோக்கிச் செல்லும்போது ஏற்படும் இந்த அதிர்வுகளைத் தடுக்க, உந்துருளிகளின் வடிவமைப்பை முழுமையாக மாற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்ற திருத்தப்பணிகள் அதன் சகோதரக் கப்பலான ‘க்ளென் ரோசா’விற்கும் (Glen Rosa) தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகுத் திட்டம் ஸ்காட்லாந்து ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட வரவு செலவு திட்டத்தை விட நான்கு மடங்கு அதிக செலவில் இந்தப் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன.
2017-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன், ஜன்னல்கள் வரையப்பட்ட நிலையில் அரைகுறையாக இருந்த இந்தப் படகை முறைப்படி திறந்து வைத்தது ஒரு ‘ஏமாற்று வேலை’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
(Ferguson Marine) ஃபெர்குசன் மரைன் நிறுவனம் தற்போது ஸ்காட்லாந்து அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டுள்ளது.
க்ளென் ரோசா படகு இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதில் மேலும் தாமதங்கள் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த கப்பல் கட்டும் தளத்தை நவீனப்படுத்த அரசாங்கம் மேலதிக நிதியுதவிகளை அறிவித்துள்ளது.
சுமார் 127 கார்கள் மற்றும் 852 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்தப் படகு, ஸ்காட்லாந்தின் தீவுப் பகுதிகளுக்கான போக்குவரத்துத் தொடர்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.













