ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் கொள்முதல் கட்டளைகளும் (ஆர்டர்கள்) நேற்று (18) உறுதிசெய்யப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐந்து எரிபொருள் விநியோகங்களுக்கான ஆர்டர்கள் நேற்று இறுதி செய்யப்பட்டதாக பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமரா குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் மார்ச் இறுதி வரை பெறப்பட்ட விநியோகங்களின் அடிப்படையில் மார்ச் இறுதி வரையிலான எரிபொருள் இருப்பை மட்டுமே நாங்கள் உறுதிசெய்திருந்தோம்.
எனினும், தற்போது ஏப்ரல் மாதத்திற்கான விநியோகங்களையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
அதன்படி, அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு சீராகக் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், QR அமைப்பு தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஒரே தொலைபேசி எண் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணின் கீழ் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.












