ஐரோப்பா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வானியல் ஆர்வலர்கள், எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள அரிய வானியல் நிகழ்வை காண தயாராகி வருகின்றனர்.
1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் முழுமையான சூரிய கிரகணம் (Total Solar Eclipse) நிகழவுள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேரடியாகச் சென்று சூரியனை முழுமையாக மறைக்கும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நிகழ்வின் உச்சக்கட்டமான சில நிமிடங்களில் பகல் நேரம் மாலை இருள் போன்ற தோற்றத்தை பெறும்.
பிரகாசமான நட்சத்திரங்கள் தென்படும் நிலையில், வெப்பநிலையும் குறையக்கூடும்.
மேலும், சூரியனின் வெளிப்புற மங்கலான வளிமண்டலமான கொரோனா (Corona) பகுதியை வெறும் கண்களால் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்த முழு சூரிய கிரகணம், ஐரோப்பாவின் சில பகுதிகளை குறுகிய நேரத்திற்கு இருளில் மூழ்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் முழு சூரிய கிரகணம் 1999 ஆகஸ்ட் 11ஆம் திகதி இடம்பெற்றது.
அப்போது சந்திரனின் நிழல் பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை கடந்து சென்றது.
அதன் பின்னர் ஐரோப்பாவில் முழு கிரகணக் காட்சி தொலைதூர பகுதிகளில் மட்டுமே பதிவாகியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் ஜோர்ஜியாவின் சில பகுதிகளிலும், 2015ஆம் ஆண்டு பேரோ தீவுகள் மற்றும் நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்திலும் முழு சூரிய கிரகணம் காணப்பட்டது.
எனினும், ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் இதுபோன்ற ஒரு அரிய வானியல் நிகழ்வுக்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காத்திருந்தன.
வானியல் கணிப்புகளின்படி, 2026 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள முழு சூரிய கிரகணத்தின் முழுமை பாதை, ரஷ்யாவின் வடக்குப் பகுதியிலிருந்து ஆரம்பமாகி, பின்னர் கிரீன்லாந்தை கடந்து, ஐஸ்லாந்தின் மேற்குப் பகுதியை ஒட்டி நகரும்.
அதனைத் தொடர்ந்து சந்திரனின் நிழல் ஸ்பெயினின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் வழியாகச் செல்லும்.
இதனால், இந்த அரிய நிகழ்வை பார்வையிட மில்லியன் கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போர்த்துக்கலின் வடகிழக்குப் பகுதியிலுள்ள சிறிய பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியும். சில சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே இந்த அனுபவம் கிடைத்தாலும், கிரகணப் பாதையில் இடம்பெறும் ஐந்தாவது நாடாக போர்த்துக்கல் அமையும்.
இதேவேளை, இந்தியா மற்றும் இலங்கையில் இந்த சூரிய கிரகணம் பிற்பகல் மற்றும் மாலை நேரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















