அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கும் அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, சுகாதாரம், கல்வி, நீதி ஆகிய அமைச்சுகளின் சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கும், வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரத போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலதிகமாக, வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமையை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள சேவைகளை விரைவுபடுத்துவதற்காக டிஜிட்டல் சேவை அமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்து அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தற்போதைய வலுசக்தி முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் இதன்போது அறிவுறுத்தப்பட்டது.













