மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன பொருட்களைச் சார்ந்துள்ள தொழில்களுக்கு இந்தியா தற்காலிக நிவாரண நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 2 ஆம் திகதியிட்ட இந்த அறிவிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயனப் பொருட்களுக்கு 2026 ஜூன் 30 வரை சுங்க வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, விநியோகப் பற்றாக்குறையைத் தணிப்பதையும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வரி விலக்கானது, பிளாஸ்டிக், பேக்கேஜிங், ஜவுளி, மருந்துகள், இரசாயனங்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகள் போன்ற, பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலைப் பொருட்களைச் சார்ந்திருக்கும் துறைகளுக்குப் பயனளிக்கும்.
மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள், உலகெங்கிலும் உள்ள முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களின் நுகர்வினையும், விலையையும் பாதித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரிகளை நீக்குவதன் மூலம், இந்தியத் தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்கள் சீராகக் கிடைக்கும் என்ற இந்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
















