பிரித்தானியாவின் கடற்பரப்புக்கு அடியில் அமைந்துள்ள தரவு மற்றும் எரிசக்தி குழாய்களை இலக்கு வைத்து ரஷ்யா இரகசிய நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவின் வடக்கு கடற்பரப்பில் உள்ள இணையத் தரவு கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களுக்கு மேலாக, ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் “இரகசிய” நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் இந்த நகர்வை முறியடிக்க பிரித்தானிய கடற்படையின் ஒரு போர்க்கப்பல்,(‘RFA Tidespring’) ரஃபா டெடெஸ்பிரிங் எரிபொருள் கப்பல் மற்றும் ‘Merlin’ ரக ஹெலிகப்டர்களைப் பயன்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.
இதேவேளை “நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த ஹீலி, பிரித்தானிய உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் விளைவிக்க முயன்றால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் 90 சதவீதத்திற்கும் அதிகமான இணையப் போக்குவரத்து கடலடியில் உள்ள சுமார் 60 கேபிள்கள் மூலமே நடைபெறுகின்றது.
எனவே, இவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு நாட்டின் ஒட்டுமொத்த தகவல் தொடர்பு மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் என்பதால், நோர்வே போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா இந்தக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் முற்றாக மறுத்துள்ளது.
ரஷ்யா எந்தவித ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும், பிரித்தானிய உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்றும் ரஷ்யாவின் ‘டாஸ்’ (Tass) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.













