மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாகவும், மற்றொரு பெண் உயிருடனும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடத்தல், கொள்ளை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 4 சந்தேக நபர்களும், திருடப்பட்ட நகைகளைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 2 நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது, சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய சந்தேக நபர்களிடம் நிகழ்நிலை (Online) ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதவான், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 15-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பணத்திற்காகப் பெண்களைக் கடத்திச் சென்று கிணற்றில் வீசிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக சாட்சியங்களைத் திரட்டி வருகின்றனர்.














