ஐரோப்பாவிடம் ஒருவேளை ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என பன்னாட்டு ஆற்றல் முகமையின் (IEA) தலைவர் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கிலிருந்து வரும் தனது இறக்குமதிகளில் குறைந்தபட்சம் பாதியையாவது ஐரோப்பாவால் ஈடுசெய்ய முடியாவிட்டால், ஜூன் மாதத்தில் கையிருப்பு ஒரு திருப்புமுனையை எட்டும் என்று அந்த அமைப்பு இந்த வார அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளைகுடாவிலிருந்து ஜெட் எரிபொருளை வெளியே கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ஆறு வாரங்களுக்கும் மேலாக திறம்பட மூடியுள்ளது.
இதனால் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து, பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விநியோகம் தொடர்ந்து தடைபட்டால், விரைவில் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என்று பன்னாட்டு ஆற்றல் முகமையின் நிர்வாக பணிப்பாளர் ஃபாத்திஹ் பிரோல் (Fatih Birol) குறிப்பிட்டுள்ளார்.
32 உறுப்பு நாடுகளுக்கு எரிசக்தி விநியோகம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கும் பன்னாட்டு ஆற்றல் முகமை, தனது மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில், வளைகுடா பிராந்தியத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளே உலகச் சந்தைக்கான ஜெட் எரிபொருளின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
















