தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படக்காட்சிகள் இணையதளங்களில் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படக்காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாவது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முழு காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகளும் கசிந்துள்ளன.
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் வெளியான விவகாரத்தில், தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் தொடர்புடைய 9 நபர்களைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் – 2’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“ஜெயிலர் – 2 படப்பிடிப்பு தள வீடியோக்கள் இணையத்தில் பரவி வருவதை எங்களது திருட்டு தடுப்பு குழு (Anti-piracy team) தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்தக் காட்சிகளைப் பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் சமூக வலைதளக் கணக்குகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.”
முன்னணி நடிகர்களின் உழைப்பில் உருவாகும் படங்களின் காட்சிகளைப் பகிர்வதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள படக்குழுவினர், ரசிகர்கள் இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ச்சியாகப் பெரிய படங்களின் காட்சிகள் கசிந்து வருவது சினிமா வர்த்தகத்தைப் பாதிக்கும் என்பதால், திரைத்துறையினர் இது குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
















