ஈரானிய படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட லெகோ (Lego) பாணி அனிமேஷன் வீடியோக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிரான பிரச்சாரத்தில் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஈரானிய கலைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அனிமேஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் லெகோ பொம்மைகளைப் பயன்படுத்தி, அமெரிக்க அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வலிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வீடியோவில் அமெரிக்காவின் வரலாற்று ரீதியான தவறுகள் மற்றும் போர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சங்கிலியால் பிணைக்கப்பட்ட கறுப்பின அமெரிக்கர்கள், ஈராக்கின் அபு கிரைப் (Abu Ghraib) சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், 1988-ல் அமெரிக்க ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ‘ஈரான் ஏர் 655’ பயணிகள் விமானத்தின் நினைவுகள், காஸாவில் இஸ்ரேலிய புல்டோசரால் கொல்லப்பட்ட அமெரிக்க ஆர்வலர் ரேச்சல் கோரியின் போராட்டம், வியட்நாம், ஆப்கானிஸ்தான் போரில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எப்ஸ்டீன் தீவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் என்பன இந்த காணொளியில் கட்டப்பட்டுள்ளன.
வீடியோவின் இறுதியில், ஈரானிய வீரர்கள் பெரும் ஏவுகணைகளில் இவர்களின் பெயர்களை எழுதித் தயார் செய்கின்றனர்.
பின்னணியில் இசை அதிர, ஏவுகணைகள் ஏவப்படுகின்றன.
அதன் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் பிரம்மாண்ட சிலைகள் சரிந்து விழுவது போலக் காட்டப்படுகிறது.
இறுதியாக,”அனைவருக்குமான ஒரே பழிவாங்கல்” (ONE VENGEANCE FOR ALL) என்ற வாசகம் திரையில் தோன்றுகிறது.
குறைந்த செலவில் உயர்தரமான இத்தகைய வீடியோக்கள் மூலம், ஈரான் சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு பொதுவான கருத்தை உருவாக்கி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க அரசியலில் உள்ள பிளவுகளைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு ‘கருத்து யுத்தமாக’ (Narrative War) இது பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்த லெகோ வீடியோக்கள், நவீன காலப் பிரச்சார உத்திகளில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.
https://x.com/i/status/2041128301960290418






