சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி இலங்கையில் சகல விளையாட்டுக்களையும் மேம்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் தனக்கு இருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராகப் போட்டியிடும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கூறியுள்ளார்.
கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த எவ்வாறு சர்வதேச உறவுகள் பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று ஏனைய விளையாட்டுக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளையும் பயிற்றுனர்களின் உதவிகைளயும் வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய திறமை தனக்கு உள்ளது என அவர் கூறினார்.
தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் தீர்மானம் மிக்க தேர்தல் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை குறிபார்த்து சுடுதல் சங்க உதவித் தலைவர் ஷிரன்த பீரிஸ், பேஸ்போல் மற்றும் சொவ்ட்போல் சங்கத் தலைவர் அசங்க செனவிரட்ன ஆகிய மூவர் ஒலிம்பிக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இந் நிலையில், இலங்கையில் இயங்கும் பல விளையாட்டுத்துறை சங்கங்கள் ஏகமனதாக தன்னை ஒலிம்பிக் குழுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
‘பெரும்பாலான விளையாட்டுத்துறை சங்கங்கள் என் மீதுள்ள நம்பிக்கையின் காரமணமாகவே என்னை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன. இந்த சங்கங்களின் பிரதிநிதிகள் என்னுடன் கலந்துரையாடி என்னை பொது வேட்பாளராக நிறுத்தியமைக்கு அவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன்.
ஒலிம்பிக் குழுவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவர்களின் ஒப்புதலுடன் பொது வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டுள்ளேன். ஒலிம்பிக் நிர்வாகத்தின் பலவீனங்கள் மற்றும் குறைகள் காரணமாக, சர்வதேச அளவில் எங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
நான் தலைவராக தெரிவானால் அந்தக் கறையைப் போக்கி ஒலிம்பிக் குழவுக்கு மீண்டும் உலகெங்கும் நற்பெயரை சம்பாதித்துக்கொடுத்து ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்குவேன். இதுவே எங்கள் அணியின் பிரதான நோக்கம்’ என ஜஸ்வர் உமர் கூறினார்
















