முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையில் உள்ள வீட்டிலிருந்து வெளியேற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
குறித்த சர்ச்சைக்குரிய வீட்டையும் நிலத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் (UGC) ஒப்படைக்க பிரதமர் ஹரினி அமரசூரிய ஒப்புக்கொண்டுள்ளதன் விளைாவக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த வீட்டையும், நிலத்தையும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஒப்படைக்கும் பணியை விரைவுபடுத்துவதாக பிரதமர் இதன்போது உறுதியளித்ததாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சசிந்து பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அதற்கு அமைவாக, அரசாங்கத்தின் உறுதிமொழிக்கு இணங்க, மாணவர்கள் தற்போது அந்த வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் ஒரு காலத்தில் தொடர்புடையதாகவும், பின்னர் உரிமையாளர் இல்லாமலும் இருந்த அந்தச் சொத்தை பல்கலைக்கழகப் பயன்பாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னதாகக் கோரியிருந்தது.
உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இடப் பற்றாக்குறையைச் சமாளிக்க, பீட வளாகங்களையும் விடுதிகளையும் நிறுவுவதற்கு இத்தகைய சொத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.













