நாட்டிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளியே மாற்றியது தொடர்பாக, நான்கு முக்கிய தனியார் வங்கிகளைச் சேர்ந்த முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த நான்கு நபர்களும் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இத்தகையதொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முறைகேடான நடவடிக்கைகளின் சூத்திரதாரி, சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளுக்கும் வாராந்திர அடிப்படையில் ரொக்கப் பணம் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, தனிநபர்களுக்கு வாரத்திற்கு 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 1,00,000 ரூபாய் ஆகிய தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நான்கு வங்கி முகாமையாளர்களில் ஒருவருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













