நுவரெலியா கிரெகரி ஏரியில் ஜெட் ஸ்கீ கவிழ்ந்த சம்பவத்தில் நீரில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆகஸ்ட் 16 ஆம் திகதி கிரெகரி ஏரியில் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்த 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பயணித்த ஜெட் ஸ்கீ திடீரென கவிழ்ந்துள்ளது.
அந்த வேளையில் ஏரியில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் விரைவு பதில் மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவு (4RU) அதிகாரிகள் சம்பவத்தை அவதானித்து உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இரு சிறுவர்களும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.













