செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று தினம் (17)யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
இன்று காலை 10:15 மணியளவில் செம்மணி படுகொலை நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, யாழ். பொது நூலகப் பகுதியிலிருந்து பேரணியாகக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம், மணிக்கூட்டு கோபுரம் வீதி வழியாக யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை சென்றடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி வழியாக, கோவில் வீதியை சென்றடைந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தை சென்றடைந்து, அங்குப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதியை வலியுறுத்தி முக்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 14, 15, 16 ஆம் திகதிகளைத் தொடர்ந்து இன்று (17) செம்மணி நினைவுத்தூபி அருகில் நீதி கோரி மக்கள் திரண்டனர்.
செம்மணி பகுதியில் இதுவரை 564 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பலியான அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை முதன்மைக்கோரிக்கையாகக் கொண்டு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கறுப்புக் கொடிகளை ஏந்தி கறுப்பு தின போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிகழ்வில், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.














