ஈரான் போருக்குத் தேவையான ஆயுதங்கள் தன்னிடம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வதற்காக, தாய்வானுக்கான 14 பில்லியன் டொலர் (10.4 பில்லியன் பவுண்ட்) பெறுமதியான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் உறுதியற்ற நிலைப்பாட்டை எடுத்ததுடன், இதுபற்றி தாய்வான் ஜனாதிபதியிடம் பேசுவதாகவும் கூறிய சில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க கடற்படையின் தற்காலிக செயலாளர் ஹங் காவோ வியாழக்கிழமை (21) செனட் விசாரணையில் இதை உறுதிப்படுத்தினார்.
அதேநேரம், ஆயுத விற்பனையில் அமெரிக்கா செய்த மாற்றங்கள் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தாய்வானின் ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (22) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது பெய்ஜிங்கிற்கு நீண்ட காலமாக எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
தன்னாட்சி பெற்ற அந்தத் தீவைத் தனது பிராந்தியமாகக் கூறும் பெய்ஜிங், அதனைப் பலவந்தமாகக் கைப்பற்றுவதையும் நிராகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












