இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினரிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள போதிலும், இருதரப்பு எல்லைப் பகுதிகளில் மோதல்கள் ஓய்ந்தபாடில்லை.
இதன் தொடர்ச்சியாக, தெற்கு லெபனான் பகுதியில் நேற்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில் ஒரு சிறுமி மற்றும் 6 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 10 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு லெபனானில் உள்ள ஹனுயே (Hanouiyeh) கிராமத்தைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தனது முதலாவது வான்வழித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் கீழ் இயங்கும் ‘இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச்’ (Islamic Health Association) சேர்ந்த 4 மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் நடந்து சில மணி நேரங்களிலேயே, டயர் (Tyre) மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் (Deir Qanoun Al-Nahr) கிராமத்தின் மீது இஸ்ரேல் மற்றொரு வான்வழித் தாக்குதலைத் தொடுத்தது.
இந்த இரண்டாவது கொடூரத் தாக்குதலில், சிரிய நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் நட்பு அமைப்பான ‘அமல்’ (Amal Movement) இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ உதவியாளர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாகப் உயிரிழந்தனர்.
மனிதாபிமான அடிப்படையில் காயமடைந்தவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அப்பாவிச் சிறுமி ஆகியோரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல்கள், தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.















