வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிவாயு வெடிப்பு (Gas Explosion) சம்பவத்தில் சிக்கி 82 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் நிலத்தடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக இந்த எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இக்கோர விபத்து சம்பவித்த தருணத்தில், சுரங்கத்திற்குள் மொத்தம் 247 தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சீன மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 தொழிலாளர்கள் வரை காணாமல் போயுள்ளதாகவும், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நிலத்தடியில் தற்போதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவின் நிலக்கரி சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததே இவ்வாறான தொடர் விபத்துகளுக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.















