கடன் சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித் திருட்டு தொடர்பான இலங்கை பொலிஸாரின் விசாரணைகளுக்கு, அவுஸ்திரேலிய உயர் ஆணையகத்தில் உள்ள அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை அதிகாரிகள் தற்போது உதவி செய்து வருவதாக ஓர் அதிகாரி தெரிவித்தார்.
நிதி அமைச்சின் கணினி அமைப்பை ஊடுருவிய இணையவழி மோசடியால் இலங்கை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்தது.
இந்த நிலையில் இது குறித்த இலங்கை பொலிஸாரின் விசாரணைக்கு தற்சமயம் அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஆஸ்திரேலிய உயர் ஆணையர் மேத்யூ டக்வொர்த் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஆணையகத்தில் பணியாற்றும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை அதிகாரிகளும் இந்தச் செயல்பாட்டில் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.













