நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்வது அவசியமா என்பது குறித்து ஜூன் 30 அன்று அரசாங்கம் மீளாய்வு செய்யும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில் புதிதாக நியமிக்கப்பட்ட உதவி முகாமையாளர் அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.
மேலும், கட்டண உயர்வு தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர்க் கட்டணங்கள் மாற்றமின்றி தொடரும் என்பதை மே 19 அன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை முடிவு உறுதிப்படுத்தியது.
நீர் விநியோகத் துறையின் முழுமையான செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட தற்போதைய கட்டண விகிதங்கள் போதுமானவை என்று அதிகாரிகள் அப்போது குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், கட்டண உயர்வு குறித்த கவலைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சுனில் ரணசிங்க, அண்மைய மின்சாரக் கட்டண உயர்வு நீர் விநியோகச் செலவுகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், நீர்க் கட்டணங்களில் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.













