வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது.
பஹ்ரைன், குவைத் மற்றும் பிற பிராந்திய இலக்குகள் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன அல்லது தோல்வியடைந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியது.
குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரான் ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டன அல்லது பறக்கும்போதே வெடித்து சிதறின.
அதே நேரத்தில் பிராந்திய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் தோல்வியடைந்துடன், பஹ்ரைனை நோக்கிச் சென்ற மூன்று ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்தாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து, அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடாப் பகுதியில் உள்ள இலக்குகளை ஈரான் மீண்டும் மீண்டும் தாக்கி வருகிறது.
பிராந்தியக் கடற்பரப்பில் பொதுமக்கள் கப்பல்களையும், குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளையும் குறிவைத்த ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும், ஈரானின் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள கெஷ்ம் தீவின் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்களின்படி, கெஷ்ம் நகரின் தெற்கே உள்ள ஒரு தகவல் தொடர்பு கோபுரத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) விவரித்ததற்குப் பதிலடியாக, அந்தப் படையானது பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகம் மீதும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு பிராந்திய நாட்டில் உள்ள விமானத்தளம் மற்றும் ஹெலிகொப்டர்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனிடையே, புதன்கிழமை காலை வர்த்தகத்தில் எண்ணெய் விலையை 1%க்கும் மேல் உயர்ந்தது.
இந்நிலையில், நிலையற்ற போர்நிறுத்தத்தின் கீழ் இந்த மோதல் ஒரு முட்டுக்கட்டையில் சிக்கியுள்ளதுடன், ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் போக்குவரத்திற்காகப் பெருமளவில் மூடப்பட்டுள்ளது.
போரை நிறுத்துவதற்கான ஒரு தற்காலிக ஆரம்ப உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஈரானும் அமெரிக்காவும் கடந்த வாரம் தெரிவித்தன. ஆனால், இரு தரப்பினரும் இன்னும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
பல நாட்களாக தெஹ்ரான் வொஷிங்டனுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.














