நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018.09.09 அன்று கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றவியல் விசாரணத் திணைக்களத்தின் (CID) மனிதப்படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, 2026.06.08 அன்று நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்பொகுணுகம பகுதியில் இக் குற்றச்செயலுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 47 வயதுடைய, ரண்பொகுணுகம, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேகநபரின் உடைமையிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்கள், T-56 ரக 4 தோட்டாக்கள், 9 மில்லிமீட்டர் ரக 8 தோட்டாக்கள் மற்றும் 12-ரக 2 தோட்டாக்கள் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றவியல் விசாரணத் திணைக்களத்தின் (CID) மனிதப்படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.













