இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குற்றவியல் நீதிமன்றங்களில் கொண்டுவரப்படவுள்ள சீர்திருத்தங்கள், கறுப்பின சமூகத்தினரிடையே நீதித்துறை மீதான நம்பிக்கையீனத்தை அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
துணைப் பிரதமரும் நீதித்துறை செயலாளருமான டேவிட் லேமியின் (David Lammy) புதிய சட்டமூலத்தின்படி, குறிப்பிட்ட குற்றங்களுக்கான நடுவர் மன்ற (Jury) விசாரணை உரிமையை நீக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், கறுப்பினக் குற்றவாளிகளே நடுவர் மன்ற விசாரணையை அதிகம் நாடுவதால், இந்த மாற்றம் அவர்கள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற நீதிக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதிகளில் வெறும் ஒரு சதவீதம் மாத்திரமே கறுப்பினத்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ள நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் 2035ஆம் ஆண்டிற்குள் தேசிய இலக்கொன்றை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், வழக்குகளை விரைவுபடுத்தவும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவை என பிரித்தானிய நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.















