இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வழங்கும் போது வெளிநாட்டு நிறுவனங்களை விட பிரித்தானிய உள்நாட்டு நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) அறிவித்துள்ளார்.
இதற்காக ‘தேசிய பாதுகாப்பு விதிவிலக்கு’ சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை உடனடியாக வெளியிட வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தின் முக்கிய ஒப்பந்தங்கள் பெருமளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்வது குறித்து நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ஏற்கனவே தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பிரித்தானியாவிற்குள் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சர்கள் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே நேற்றையதினம் நடைபெற்ற ஜிஎம்பி (GMB) தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி, இதனை தெரிவித்தார்.














