வட அயர்லாந்தின் நியூடவுன்அபே (Newtownabbey), ரத்கூல் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் கார் ஒன்று இனவெறித் தூண்டல் காரணமாகத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் மோர்ன்பெக் டிரைவ் (Mournebeg Drive) பகுதியில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலானது திட்டமிட்ட ஒரு இனவெறித் தாக்குதல் எனப் பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதல் நடத்திய கும்பல், காரின் பின்புறப் பயணியர் பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கி, அதன் வழியே உள்ளே தீ வைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீ வைக்கப்பட்டதன் காரணமாகக் காரின் உட்பகுதி முற்றிலும் கருகி சாம்பலாகியுள்ளதுடன் காரின் இருக்கைகள் உருகியுள்ளதுடன், காரின் கூரைப்பகுதியில் இருந்து இரும்புத் துண்டுகள் உருகியுள்ளன.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வட அயர்லாந்தில் கடந்த ஒரு வார காலமாகத் தீவிரமடைந்து வரும் இனவெறித் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவமும் பார்க்கப்படுகிறது.
கடந்த வார இறுதியில் மட்டும் பெல்ஃபாஸ்ட் (Belfast) பகுதியில் உள்ள வெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகள் மீது இத்தகைய இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் பொலிஸார், சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் காடைத்தனம் செய்த கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



















