வளைகுடாப் பகுதியில் அண்மைய காலமாக நிலவி வந்த மோதல்களை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான தங்கள் கருத்து வேறுபாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வொஷிங்டன் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.
தொடர் பதிலடித் தாக்குதல்களால் நெருக்கடிக்குள்ளாகியிருந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தைக் நிலைநிறுத்த முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.
தற்போதைக்கு இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திவைப்பார்கள்; இதனால் கப்பல்கள் தடையின்றிச் செல்ல முடியும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஜூன் 17 அன்று எட்டப்பட்ட 14 அம்சங்களைக் கொண்ட அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட நீரிணைப் பகுதி போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது என்பது இந்த கருத்தின் அர்த்தமாகும்.
போர் நிறுத்தம் குறித்த செய்தியை முதன்முதலில் வெளியிட்ட அமெரிக்க செய்திச் சேவையான ஆக்சியோஸ், ஒரு மூத்த வொஷிங்டன் அதிகாரியை மேற்கோள் காட்டி, கட்டாரில் செவ்வாய்க்கிழமை (30) பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று கூறியது.
கடந்த வியாழக்கிழமையன்று ஹார்முஸ் நீரிணையில் ஒரு சரக்குக் கப்பல் மீது ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதைத் தொடர்ந்து, பல நாட்களாக நடந்த தாக்குதல்கள் மற்றும் எதிர்த்தாக்குதல்களுக்குப் பின்னர், இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புகிறது.
ஜூன் 17 அன்று ஒப்புக்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர்நிறுத்தத்தை மீறியதாக அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் இஸ்லாமியக் குடியரசு இல்லாமல் போய்விடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்திய சிறிது நேரத்திலேயே, ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலையில் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியது.
இந்த தாக்குதல்களின் விளைாக விளைவாக திங்களன்று (29) மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்தன.
அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலை பீப்பாய்க்கு 58 சென்ட்கள் (0.8%) உயர்ந்து 72.57 டொலர்களாக இருந்தது
அதேவேளையில், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 88 சென்ட்கள் (1.3%) உயர்ந்து 70.11 டொலர்களாக இருந்தது.
இதற்கிடையில், லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், ஈரான் ஆதரவு ஆயுதமேந்திய ஹிஸ்புல்லா போராளிகள் பயன்படுத்திய நிலத்தடி உள்கட்டமைப்பை அழித்து, அவர்களை மீண்டும் தாக்கியதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
வெள்ளிக்கிழமை லெபனானுடன் செய்துகொண்ட அண்மைய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலுக்குப் பின்னர் இது நிகழ்ந்தது.
பரந்த ஒப்பந்தம் நீடிக்க வேண்டுமானால், லெபனானில் நடக்கும் சண்டைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று ஈரான் கூறுகிறது.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஒரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஈரானை மீண்டும் தாக்கியதாக அமெரிக்க இராணுவம் முன்னதாகக் கூறியது.
இந்த நீரிணையை, மோதலின் பெரும்பகுதிக்கு தெஹ்ரான் பெருமளவில் மூடியிருந்தது.















