நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையினுள் திடீரென ஏற்பட்ட இந்த மோதலைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்ற நிலைமை உருவானது. இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகக் களம் இறங்கி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த மோதலில் காயமடைந்த 20 கைதிகளும் அவசர அவசரமாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













