திருத்தப்பட்ட வருடாந்திர பேருந்துக் கட்டண உயர்வு இன்று (06) முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்படி பேருந்துக் கட்டணங்கள் 12% முதல் 20% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டண திருத்தத்திற்கு கடந்த வாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒப்புதல் அளித்தது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 30 ரூபாவிலிருந்து 34 ரூபாவாகவும், அதிகபட்சக் கட்டணம் 2,422 ரூபாவிலிருந்து 2,902 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சொகுசுப் பேருந்துகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவைகளுக்கான கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டண முறை குறித்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப தங்கள் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களைப் (ticketing machines) புதுப்பிக்குமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு நடத்துநருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தேசியப் போக்குவரத்து கட்டணக் கொள்கை வகுக்கப்படும் வரை ஒரு இடைக்கால நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டணத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.
எரிபொருள் செலவுகள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள், பணியாளர்கள் தொடர்பான செலவுகள், டயர் மற்றும் டியூப் செலவுகள், மூலதனத்திற்கான வட்டிச் செலவுகள் மற்றும் பிற தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பொதுச் செலவுகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த பேருந்து கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.













