அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து அவற்றின் வேகத்தைக் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக, லேசர் மற்றும் வீடியோ தொழில்நுட்பங்கள் இணைந்த அதிநவீன கைக் கேமராக்களை வட அயர்லாந்து பொலிஸார் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
‘ட்ருகேம் II’ என்று அழைக்கப்படும் இந்த மூன்று அதிநவீன கேமராக்கள், வட அயர்லாந்து பொலிஸ் சேவையின் (PSNI) போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரால் அடுத்த மூன்று மாதங்களுக்குச் சோதனை முறையில் பயன்படுத்தப்படவுள்ளன.
வேகக் கட்டுப்பாடுகளை மிகவும் திறம்பட நடைமுறைப்படுத்தவும், குறிப்பிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் போக்குவரத்துப் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் இத்தொழில்நுட்பம் பொலிஸாருக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களைக் குறைப்பதற்கு, வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே மிக முக்கியமான வழியாகும் என்று ‘வடமேற்கு சாலை பாதுகாப்பு கூட்டமைப்பின்’ அதிகாரி கிறிஸ் ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நடப்பு 2026ஆம் ஆண்டில் மட்டும் வட அயர்லாந்து சாலைகளில் விபத்துகள் காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












