பிரிட்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் முக்கிய நிதியுதவியான ‘தனிநபர் சுதந்திரக் கொடுப்பனவு’ திட்டம், மில்லியன் கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ தகுந்த பலனை அளிக்கவில்லை என்றும், அதில் அடிப்படை மாற்றங்கள் தேவை என்றும் அதிகாரப்பூர்வ மறுஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் நடைமுறையிலுள்ள இந்த நிதியுதவித் திட்டம் தற்போதைய சூழலுக்கு “முற்றிலும் தகுதியற்றதாக” உள்ளது என்று இந்த மறுஆய்வை முன்னெடுத்து வரும் பிரிட்டனின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் (Stephen Timms) தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், இதற்கான தகுதி ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைமுறைகள் மிகவும் மனிதத்தன்மையற்றதாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமைச்சரின் இந்த இடைக்கால அறிக்கை , மாற்றுத்திறனாளிகளின் தகுதியைக் கணிக்கும் தற்போதைய மதிப்பீட்டு முறையில் மிகப்பாரிய அளவிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.















