பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய சமூக ஊடகக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த வசந்த காலம் முதல், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சில குறிப்பிட்ட சமூக ஊடக செயலிகளைத் தானாகவே முடக்கும் ‘ஊரடங்கு’ அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், பயனர்களை அதிக நேரம் திரையில் செலவிடத் தூண்டும் ‘Auto-Play’ வீடியோக்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் (personalised content) இந்த வயதினருக்குத் தானாகவே செயலிழக்கச் செய்யப்படும்.
எனினும், இந்தத் தடைகள் கட்டாயமானவை அல்ல என்பதால், பயனர்கள் விரும்பினால் அவற்றை நீக்கிக் கொள்ள முடியும். அதேபோல், 18 வயதுக்குட்பட்டவர்கள் AI சாட்பாட்களைப் (chatbots) பயன்படுத்தும் போது, அவ்வப்போது கட்டாய இடைவேளைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளம் பருவத்தினரின் தூக்கத்தையும், கல்வி மற்றும் குடும்ப நேரத்தையும் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கெண்டல் (Liz Kendall) தெரிவித்துள்ளார். இருப்பினும், இது முழுமையான பாதுகாப்புத் திட்டம் அல்ல எனச் சில ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.














