15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் இன்று (21) இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.
நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின்படி 2026 செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் செட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.
மேலும், 2027 ஜனவரி முதல், ஏற்கனவே 15 வயதிற்குட்பட்டோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகக் கணக்குகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதேவேளை, புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல் பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
இருப்பினும் விக்கிப்பீடியா, கல்வி இணையத்தளங்கள் மற்றும் திறந்த மூல மென்பொருள் தளங்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும்.
பிரான்ஸ் பொதுச் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 90 சதவீதத்தினர் தினமும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மனநலப் பிரச்சினைகள், தற்கொலை எண்ணங்கள் மற்றும் தீய பழக்கவழக்கங்களுக்கான ஆபத்தை அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் முன்னெடுக்க விரும்பும் முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறுவர்களை சமூக ஊடகங்களின் கட்டுப்பாடற்ற உலகிற்குள் அனுமதித்ததன் மூலம் அவர்களின் கவனச் சிதறலை நாம் அதிகரித்துள்ளோம் என அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியிருந்த நிலையில் தற்போது பிரான்ஸைத் தொடர்ந்து கிரீஸ், ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.
















