ஈரானுடனான தனது நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு ஓமன் (அமெரிக்காவின் நட்பு நாடு) குறுக்கே நின்றால் அதன் மீது குண்டுவீசுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொலைபேசி வழி நேர்காணலின்போது, அமெரிக்க ஜனாதிபதி ஓமன் நாட்டிற்கு எதிராக ஒரு தகாத வார்த்தையைப் பயன்படுத்தியவாறே அந்த மிரட்டலை விடுத்ததாக அந்த சர்வதேச செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து, அமெரிக்காவும் ஓமனும் தெஹ்ரானுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அமெரிக்கா-ஈரான் மோதலின் போது கடந்த ஆறு மாதங்களாக இது பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது.
முன்னதாக, ஓமனுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலையில் தாங்கள் இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 60 நாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து தெளிவற்ற நிலை நிலவுகிறது.
இந்த நிலையில் திங்களன்று (17) ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போது ட்ரம்பிடம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.
பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் பெருமளவுக்கு முடக்கியுள்ளது.
அதனை மீண்டும் திறப்பது என்பது ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
அந்த நீரிணையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓமன், இமோதலில் தான் ஒரு நடுநிலையான நாடு என்று கூறுகிறது.
இருப்பினும், அது ஈரானிடமிருந்து பல தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது; தற்போது, அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானுடன் இணைந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதை உறுதிசெய்ய வொஷிங்டனும் தனது சொந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஓமன் குறுக்கே நின்றால், நாங்கள் அவர்கள் மீது குண்டுவீசி அவர்களை நாசமாக்கிவிடுவோம் என்று ட்ரம்ப் கூறியதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அந்த நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது குறித்து இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஓமன் மீதான தனது அச்சுறுத்தலை ட்ரம்ப் விடுத்தார்.
ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான தனது இலட்சியங்களுக்கு எது தடையாக அமையும் என்று ட்ரம்ப் கருதுகிறார் என்பது தெளிவாக இல்லை.
ஃபாக்ஸ் (Fox) ஊடகத்துடனான அதே நேர்காணலில், ஈரானில் ஒரு முக்கிய இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாகத் திகழும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) அமெரிக்கா நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
இருப்பினும் ட்ரம்பின் இந்தக் கூற்றை IRGC-யின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மறுத்துள்ளார்.


















