தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது மற்றும் இராணுவ ஆதரவு அளிப்பது தொடர்பாக அமெரிக்காவை வட கொரியா விமர்சித்துள்ளது.
அதன்படி, தாய்வான் நீரிணையில் பதற்றத்தை அமெரிக்கா தூண்டிவிடுவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) புதன்கிழமை (07) தெரிவித்தது.
வட கொரிய சர்வதேச விவகார ஆய்வாளர் கிம் மியோங் சோலை மேற்கோள் காட்டி கே.சி.என்.ஏ வெளியிட்ட ஒரு அறிக்கை, தாய்வான் மீதான அமெரிக்கக் கொள்கையானது பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைப்பதாகவும், தாய்வானில் அமெரிக்கா விற்ற போர் விமானங்கள் தோன்றியதைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தது.
தாய்வானின் பாதுகாப்பிற்காக, வலிமைமிக்க நாடான சீன மக்கள் குடியரசுடன் நேரடி மோதலில் ஈடுபடத் தயாராக இருக்கிறதா என்பதையும், அதன் விளைவுகளைச் சமாளிக்க முடியுமா என்பதையும் அமெரிக்கா இருமுறை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அது மேலும் கூறியது.
பெய்ஜிங்கிலிருந்து அதிகரித்து வரும் இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில், 2019-ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட 66 புதிய F-16V Block 70 ரக போர் விமானங்களில் முதல் இரண்டை தாய்வான் கடந்த வாரம் பெற்றுக்கொண்டது.
பெய்ஜிங்கின் மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் ஒன்றான தாய்வான் விவகாரத்தில், வடகொரியா சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதையே இந்தக் கருத்துகள் காட்டுகின்றன.
ஜனநாயக முறையில் நிர்வகிக்கப்படும் இந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோருகிறது;
ஆனால், சீனாவின் இந்த இறையாண்மை உரிமைக் கோரலை தாய்வான் நிராகரிக்கிறது.
அண்மைய ஆண்டுகளில் வட கொரியா சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
இது ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.













