இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் மோசமான ஆட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மாத்திரம் வெற்றிகளை உறுதிப்படுத்தாது எனத் தெரிவித்த அமைச்சர், திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன் பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும், போட்டிகளில் வெற்றிபெறுவதற்கு திறமையான வீரர்களை உருவாக்க வேண்டும்.
அவ்வாறான வீரர்கள் இல்லாதபோது போட்டிகளில் தோல்வியடைய நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிமட்டத்திலிருந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
அதன் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.
இதற்கமைய, கிரிக்கெட் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக கிரிக்கெட் மாற்றத்திற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிர்வாகத்தை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய நிர்வாகக் குழுவொன்றை நியமிப்பதற்கான வழி ஏற்படும்.
போட்டித்தன்மை மிக்க வீரர்களை உருவாக்குவதற்கும் இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவதற்கும் தேவையான கட்டமைப்பை உருவாக்குவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம்.
ஏனைய கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தொடர்ச்சியாகத் தமது திறன்களை மேம்படுத்தி வருகின்றது.
எனவே, சர்வதேச மட்டத்தில் போட்டியிடக்கூடிய வீரர்களை இலங்கை உருவாக்குவது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.













