கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியின் ஒரு பகுதியை அகலப்படுத்தி மேம்படுத்துவதற்காக, 1.07 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ‘டுடாவே பிரதர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ (Tudawe Brothers (Pvt.) Ltd.) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
தேசிய வீதிகளை அகலப்படுத்தி மேம்படுத்தும் தேசியத் திட்டத்தின் கீழ், 58+240 கிலோமீட்டர் முதல் 63+000 கிலோ மீட்டர் வரையிலான பகுதிக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தேசிய அளவிலான போட்டித்தன்மை கொண்ட ஏல நடைமுறையின் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதில் எட்டு ஏலங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கொள்முதல் செயல்முறை குறித்து கொள்முதல் குழுவும் கொள்முதல் மேன்முறையீட்டுச் சபையும் பரிசீலனை செய்தன என்று அமைச்சர் கூறினார்.
இந்தப் பரிசீலனைகளைத் தொடர்ந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், ‘டுடாவே பிரதர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.












