பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளைப் பலப்படுத்தத் தீர்மானித்தால், ‘சுவிட்சர்லாந்து பிளஸ்’ (Switzerland plus) ஒப்பந்த மாதிரி மூலம் மிக விரைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியும் என ஐரோப்பிய பாராளுமன்ற வர்த்தகக் குழுத் தலைவர் பேர்ண்ட் லாங்கே (Bernd Lange) தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனநாயகத்தையும் திறந்த சந்தையையும் ஊக்குவித்த பிரித்தானியாவின் பங்களிப்பை ஐரோப்பிய ஒன்றியம் இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘மேட் இன் யுரோப்’ (Made in Europe) உற்பத்திச் சட்ட திட்டங்களில் பிரித்தானியாவும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் Bernd Lange வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவுமுறை குறித்து பிரித்தானிய அரசாங்கமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய பாராளுமன்ற வர்த்தகக் குழுத் தலைவர் பேர்ண்ட் லாங்கே (Bernd Lange) சுட்டிக்காட்டியுள்ளார்.
















