2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (23) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அனுராத செனவிரத்ன தெரிவிக்கையில், அரச துறை ஊழியர்கள் அனைவருக்கும் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்பதே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் பிரதான கோரிக்கையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இன்று அதிபர்கள் கறுப்பு உடையணிந்து பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளதாக அதிபர்கள் தரச் சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.
அனைத்து இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் உதெனி திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கம் அங்கீகரிக்கத் தவறியமையே இத்தகைய நிலைமைக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் லசித கன்னங்கர தெரிவித்துள்ளார்.
மேலும், தமது சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தவறினால், வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும், பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத் தலைவரான தம்மிக எஸ். பிரியந்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.













